சித்தர் கால சிறந்த நாகரிகம்!
அடிகளார் மு. அருளானந்தம்
6
தென்னவன் தம் மக்களைப் பாதுகாக்கும் அதேவேளை, அவர்களுக்கிடையே ஏற்படும் பிரச்சினைகளுக்குத் தேவையான தீர்வு அல்லது தீர்ப்பு சொல்லும்போது, தனக்கென ஆலோசனை கூறும் அனுபவமிக்க மூத்தோர்களிடம் பரிசீலனை செய்து, அதைத் தீர்ப்பாக மக்களிடம் தெரிவிக்கும்போது, நண்பகல் வேளையில், அரண்மனை முற்றத்தில் நாட்டப்பட்ட நீதித்தூணின் நிழல் பூமியின்மீது விழாத நேரத்தில், மன்னனின் திருவாய்மொழியாகப் பகிரப்படும்.
அத்தீர்ப்பின்மேல் எந்த ஆய்வும் செய்யாமல், அது இறைவனின் தீர்ப்பாகவே மக்களால் மதிக்கப்பட்டது. ஏனெனில், மன்னனின் ஆசனத்திற்கு மேலுள்ள வெண்கொற்றக்குடை, கடந்த இதழில் விவரித்தவாறு, ஓராண்டு முழுவதும் வானத் தில் சுழன்றுவரும் நட்சத்திர, ராசி, கோள்கள் ஆகிய வற்றின் உண்மை நிலையைப் பிரதி பலித்து, அவ்வியற்கையின் சாட்சியாக மன்னன் நடுநிலை தவறாது, தெய்வத் தன்மையைப் பிரதி பலிப்பவன் என்பதே உண்மை.
மன்னனின் வெண் கொற்றக்குடையின் விட்டம் ஏழு அடியாகவும், அதன் சுற்றளவு நீளம் 22 அடியாகவும் இருக்கும். தென்பாண்டியன் கொலுமன்றத் திற்கு வரும்போது தங்கத் தினாலான வேப்பம்பூ வைத் தன் மகுடத்தில் அணிந்திருப்பான்.
எல்லாவித வைரஸ் நோய்களைத் தீர்க்கும் வல்லமை பெற்றது வேப்பம்பூ.
அதுபோல், மக்களிடம் காணப்படும் குற்ற நோய்களிடமிருந்து மக்களைக் காக்கும் வல்லமை படைத்தவன் தென்னவன் பாண்டியன்.
தென்னவன் பாண்டியன் முதன்முதலில் மன்னனாக முடிசூட்டப்படும்போது, அன்று காலை அவனுக்கு புனித நீராட்டப்பட்டு, வாலை குருநாதனால் 51 வித்தொலி கொண்டு பூஜிக்கப்பட்டு, அவனை தெய்வநிலைக்கு உயர்த்தி, அரியாசனத்தில் அமர்த்தி, வேப்பம்பூ வடிவம் பொறிக்கப்பட்ட மணிமகுடம் சூட்டப்படும்.
(51 வித்தொலிகளை அட்டவணையில் காண்க.)
"செருமிதானை செம்பிய வளவன் திரு உலகளந்த செம்பொற்கோலே.'
மேற்கண்ட பைந்தமிழ் அடிகள் தென்தமிழ் மன்னனின் செங்கோல் பற்றியதாகும்.
அதாவது, அணு 8 கொண்டது கதிரெழுதுகள்;
கதிரெழுதுகள் 8 கொண்டது பஞ்சித்துகள்;
பஞ்சித்துகள் 8 கொண்டது மயிர்முனை;
மயிர்முனை 8 கொண்டது நுண்மணல்;
நுண்மணல் 8 கொண்டது வெண் சிறுகடுகு;
வெண் சிறுகடுகு 8 கொண்டது எள்ளு;
எள் 8 கொண்டது நெல்;
நெல் 8 கொண்டது விரல்;
விரல் 12 கொண்டது சாண்;
சாண் 2 கொண்டது முழம்;
முழம் 2 கொண்டது சிறுகோல்;
சிறுகோல் 4 கொண்டது மன்னனின் செங்கோல்.
இவ்வாறு ஒரு மன்னனின் செங்கோலை பொன்னால் செய்து, அதன் அடிப்பகுதியிலிருந்து உச்சிவரை ஒன்பது பாகங்களாகப் பகுத்து, அதன் அடியிலிருந்து 1-ஆவது பாகத்தில் செங்கோலைச் சுற்றி வைடூரியக் கற்களும்;
2-ஆவது பாகத்தில் ரத்தக் கோமேதகமும்;
3-ஆவது பாகத்தில் இந்திர நீலக்கற்களும்;
4-ஆவது பாகத்தில் வைரக்கற்களும்;
5-ஆவது பாகத்தில் கனகபுஷ்பகக் கற்களும்;
6-ஆவது பாகத்தில் மரகதக் கற்களும்;
7-ஆவது பாகத்தில் பவளக் கற்களும்;
8-ஆவது பாகத்தில் சோனை முத்துகளும்;
9-ஆவது பாகத்தில் மாணிக்கக் கற்களும் பதிக்கப்பட்டன.
மன்னருக்கு ஒருபொழுது நகர்வலம் வருவதற்கான ஊர்வலக் காலம் கீழ்க்கண்டவாறு திட்டமிடப்பட்டது.
கண்ணிமை 2 கொண்டது கைநொடி;
கைநொடி 2 கொண்டது மாத்திரை;
மாத்திரை 2 கொண்டது குரு;
குரு 2 கொண்டது உயிர்;
உயிர் 2 கொண்டது சணிகம்;
சணிகம் 12 கொண்டது வினாழிகை;
வினாழிகை 60 கொண்டது நாழிகை;
நாழிகை 7 1/2 கொண்டது சாமம்;
சாமம் 4 கொண்டது- ஒரு மன்னன் நகரத்தின் தெருக்களில் ராஜவீதியில் ஊர்வலமாக அழைத்துவரும் பொழுது (காலம்) என முறைப்படுத்தப்பட்டிருந்தது.
அந்தப் பொழுது 2 கொண்டது நாள்;
நாள் 30 கொண்டது திங்கள்;
திங்கள் 12 கொண்டது ஆண்டு.
இந்த ஆண்டை முழுவதும் ஆளுமை செய்பவன் "ஆண்டான்' எனப் போற்றப் பட்டான்.
ஆண்டான் காலடியெடுத்து நடக்கையில், அவனது ராஜகம்பீர நடையில் ஒருகால் எடுத்து வைத்து, மறுகால் எடுத்துவைக்கும் மனைக்கோல் அளவும் பின்வருமாறு அளவிடப்பட்டது.
நெல் 8 கொண்டது உத்தம விரல்;
நெல் 7 கொண்டது மத்திம விரல்;
நெல் 6 கொண்டது அதம விரல்;
உத்தம விரல் 9 கொண்டது ஒரு மன்னனின் காலடியாக இருக்க வேண்டுமென்பது ஆதித்தமிழ் மரபு.
மன்னன் முடிசூட்டும்பொழுது அவனுக்காக கொண்டுவரப்படும் பரிசுப்பொருட்களின் அளவும் கீழ்க்கண்டவாறு சீர்செய்யப்பட்டது.
மனம் எனும் சிறு கொள்ளளவு 100 கொண்டது புகை;
புகை 100 கொண்டது பால்;
பால் 100 கொண்டது தண்ணீர்;
தண்ணீர் 100 கொண்டது நெய்;
நெய் 100 கொண்டது செலம்;
செலம் 100 கொண்டது விந்து;
விந்து 100 கொண்டது துள்ளி;
துள்ளி 100 கொண்டது துருவம்;
துருவம் 100 கொண்டது செவிடு;
செவிடு 5 கொண்டது ஆழாக்கு;
ஆழாக்கு 2 கொண்டது உழக்கு;
உழக்கு 4 கொண்டது நாழி;
நாழி 8 கொண்டது குறுணி;
குறுணி 4 கொண்டது தூணி;
தூணி 3 கொண்டது சுமை.
ஒருவர் மன்னருக்கு பரிசுப்பொருள் ஒரு சுமைக்குக் குறையாமல் கொண்டு வருவதுதான் முறையாகக் கருதப்பட்டது.
மன்னர் முடிசூட்டியபின் புரவலர்கட்கு ஒன்பதுவகை தானங்களைச் செய்வான். அவற்றில் ஒன்று நிலதானம்.
நில தானமானது மூன்றுவகையாகப் பகுக்கப்பட்டது.
சிறந்த மகான்களுக்கு, குருமார்களுக்கு, மடங்களுக்கு, குருகுலங்களுக்கு விடப்படும் நிலங்களை உத்தம நிலம் என்றழைத்தனர். உத்தம நிலம் என்றால் அந்நிலங்களில் குவளை, சடை, கிரந்தை, காவேடு, காவேளை, பவளக்கொடி, புல், சோற்றுப்பயிர் போன்றவை முளைத்திருக்கும். இந்நிலம் உணவு உற்பத்திக்கு சிறந்த இடமாக அமையும்.
ஆதலால், உத்தமர்களுக்காக வழங்கப் பட்டது.
இரண்டாவது மத்திம நிலம். இந்நிலத்தில் செருப்பை, துராய், கண்டங்கத்திரி, வேல், அறுகு, சாமை, கேழ்வரகு போன்றவை முளைத்திருக்கும். இது அந்நகர்ப்புறப் பகுதியில் வாழும் சேரித் தொழிலாளர்களுக்கு புன்செய் என்ற பெயரில் தானமாக வழங்கப்பட்டது.
மூன்றாவது அதம நிலம். இந்நிலத்தில் பொடுதலை, பொரி, விரை, துடப்பம், பருத்தி போன்றவை முளைத்திருக்கும். இந்நிலம், வெளியூர்களிலிருந்து புதிதாக பிழைப்பிற்காக வருபவர்கள் வீடுகட்டி வசிப்பதற்காக, நத்த நில தானமாக- முடிசூட்டப்பட்ட நாளில் கொடையாக வழங்கப்பட்டன.
(தொடரும்)
தொகுப்பு: சி.என். இராமகிருஷ்ணன்
_____________
51 வித்தொலிகள்
1. அம்- சிரசு
2. ஆம்- முகம்
3. இம்- வலது கண்
4. ஈம்- இடது கண்
5. உம்- வலது காது
6. ஊம்- இடது காது
7. ரும்- வலது மூக்கு
8. ரூம்- இடது மூக்கு
9. லும்- வலது கன்னம்
10. லூம்- இடது கன்னம்
11. ஏம்- மேல் உதடு
12. ஐம்- கீழ் உதடு
13. ஓம்- மேல் பல்வரிசை
14. ஓளம்- கீழ்ப் பல்வரிசை
15. அம்- நாக்கு நுடை, தாள
16. அ:- கழுத்து, உச்சந்தலை
17. கம்- வலது தோள்
18. கம்- வலது முழங்கை
19. கம்- வலது மணிக்கட்டு
20. கம்- வலது கைவிரல் அடி
21. ஙம்- வலது கைவிரல் நுனி
22. சம்- இடது தோள்
23. சம்- இடது முழங்கை
24. ஜம்- இடது மணிக்கட்டு
25. ஐம்- இடது கைவிரல் அடி
26. ஞம்- இடது கைவிரல் நுனி
27. டம்- வலது தொடை மூலம்
28. டம்- வலது முழங்கால்
29. டம்- வலது கணுக்கால்
30. டம்- வலது கால்விரல் அடிநுனி
31. ணம்- இடது தொடை மூலம்
32. தம்- இடது முழங்கால்
33. தம்- இடது கணுக்கால்
34. தம்- இடது கால்விரல் அடி
35. தம்- இடது கால்
36. நம்- இடது கால்விரல் நுனி
37. பம்- வலது விலா
38. பம்- இடது விலா
39. பம்- முதுகு
40. பம்- நாபி
41. மம்- வயிறு
42. யம்- இதயம்
43. ரம்- வலது கக்ஷம்
44. லம்- பிடரி
45. வம்- இடது கக்ஷம்
46. ரம்- இதயம் முதல் வலது கைபெருவிரல் வரை
47. ஷம்- இதயம் முதல் இடது கை பெருவிரல் வரை
48. ஸம்- இதயம் முதல் வலதுகால் பெருவிரல் வரை
49. ஹம்- இதயம் முதல் இடதுகால் பெருவிரல் வரை
50. ளம்- இடுப்பு முதல் கால் விரல் நுனிவரை
51. க்ஷம்- இடுப்பு முதல் உச்சந்தலைவரை